டெல்லி: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி,  மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய சிவில் சர்வீஸ் (முதன்மை) தேர்வுகள் ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தது.  அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இதன் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சிவில் சர்வீசஸ் தேர்வு‌ மே 26, 2024  நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது  மாற்றியமைத்துள்ளது.  அதன்படி, பிரிலிம்ஸ் தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (சிஎஸ்இ) 2024 க்கான பதிவு காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டது. திருத்தச் செய்ய மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.