டெல்லி: இன்டர்நெட் சேவை, ஸ்மார்ட் போன் இல்லாமல், சாதாரண பழைய பட்டன் போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய சேவையை இந்திய  ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மார்ச் 8ந்தேதி  அன்று நாட்டில் டிஜிட்டல் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க UPI123Pay எனப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லாத UPI ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் சாமானிய மக்களும், ஏழைகளும், இணைய வசதி இல்லாமல், இணையவழி பண பரிமாற்றம் செய்ய முடியும்.

இதற்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கி இயக்குனர்  சக்தி காந்ததாஸ்,  சாதாரண ஃபீச்சர் போன்களுக்கான UPI – UPI123Pay மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான 24*7 ஹெல்ப்லைன் வசதிகளை  மார்ச் 08, 2022 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி வைத்தார்.  ஸ்மார்ட்-போன் மற்றும் இணைய வசதி இல்லாமல் சாதாரண பட்டன் போன் வைத்துள்ளவர்களும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்த விரும்புவோர் வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து, பின்னர் டெபிட் கார்ட் விவரங்களை பதிவேற்றி, பின் நம்பர் செட் செய்யு மாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர் 080 4516 3666 என்ற ஐ.வி.ஆர் எண்ணை அழைத்து, பணப் பரிவர்த்தனை சேவையை தேர்வு செய்து, நமது நண்பர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ உடனடியாக பணம் செலுத்த முடிகிறது.

 வியாபாரிகளின் எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து கூறிய சக்திகாந்த தாஸ், இந்தியாவில் டிஜிட்டல் சேவை மற்றும் பேமெண்ட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்குடன் ரிசர்வ் வங்கி ஸ்மார்ட்போன் இல்லாத 40 கோடி பியூச்சர் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய யூபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் வங்கி கணக்குகள் மத்தியிலான டிஜிட்டல் பேமெண்ட் சேவையான UPI – Unified Payments Interface அறிமுகம் செய்த பின்பு பேமெண்ட் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றும், UPI 123PAY மூலம் ஊரகப் பகுதிகளிலும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வழி உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.