டெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான  வெங்கையா நாயுடு ஆகியோர் சந்தித்து உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ஷிப்டு முறை தவிர்க்கப்பட்டு, ஒரே நேரத்தில் இரு அவைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக, மக்களவை, மாநிலங்களவை ஷிப்டு முறையில் இயங்கி வந்தது. மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். ராஜ்யசபா கூட்டத்தொடர் காலை 9 மணி முதல் 1மணி வரையும் நடைபெற்று வந்தது.

அதையடுத்து பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து, 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக, அவையை இரு அமர்வாக  நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து இரண்டாவது அமர்வு  மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த அமர்வில் மக்களவை, மாநிலங்களவை செயல்பட்டு வந்த ஷிப்டு முறை நிறுத்தப்பட்டு,  காலை 11 மணி முதல் ஒரே நேரத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.