கிரீஸுக்கு வெளியில் நிற்கும் ரன்னரை ரன் அவுட் செய்வது இனி நியாயமற்ற விளையாட்டின் கீழ் வராது.

கிரிக்கெட் விளையாட்டின் சட்டங்களில் புதிய விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.சி. தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை வரையறுக்கும் உரிமையை லண்டனில் 1787 ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேரிலிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) பெற்றிருக்கிறது, இது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செயல்படுகிறது.

ஏற்கனவே 2017 ம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்தது எம்.சி.சி., இந்த நிலையில் கடந்த வாரம் புதிய மாற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ள இந்த கிளப் புதிதாக அறிவித்துள்ள விதிமுறைகள் 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அவற்றில் சில குறிப்பிடும்படியான புதிய விதிமுறைகள் :

விதி 18.11 : கேட்ச் அவுட்க்கு பிறகு வரும் வீரர்

கேட்ச் மூலம் அவுட்டான வீரருக்கு பதில் விளையாட வரும் புதிய வீரர் அந்த ஓவர் முடியவில்லை என்றால் அடுத்த பந்தை விளையாட வேண்டும்.

இதற்கு முன் பந்தை அடித்தவர் ஆடுகளத்தில் பாதி தூரம் கடந்திருந்தால் அடுத்து வரும் புதிய வீரர் ரன்னராக களமிறங்குவார்.

விதி 21.4 : டெட் பால்

பந்தை வீசு ஓடி வந்து பந்து வீசாமல் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பந்தை தூக்கி எறிவது இனி டெட் பாலாக கருதப்படும். இதுவரை இது நோ பால் என்று அழைக்கப்படுகிறது.

விதி 22.1 : வைட்

பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கிய போது பேட்ஸ்மேன் நின்றிருந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லும் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பந்துவீசுபவர் ரன்-அப் தொடங்கிய பின் பேட்ஸ்மேன் நகரும் இடத்தில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே வைட் கொடுக்கப்படுகிறது.

விதிகள் 27.4 மற்றும் 28.6 – பீல்டர்களின் நியாயமற்ற செய்கைகள்

பந்து வீசும் போது பீல்டர் செய்யும் ஆட்சேபனைக்கு உரிய காரியத்தால் டெட் பால் என்று தற்போது கூறப்படுகிறது.
இனி, பீல்டங் அணியின் இந்த நியாயமற்ற செய்கைக்கு பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி ரன்களாக வழங்கப்படும்.

விதி 41.3 – எச்சில் தொட்டு பந்தை துடைப்பது

எச்சில் தொட்டு பந்தைத் துடைப்பது இனி நியாயமற்ற செய்கையாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா சூழலுக்குப் பின் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விதி 38.3 – கிரீஸுக்கு வெளியில் நிற்கும் ரன்னரை ரன் அவுட் செய்வது

பந்து வீச்சாளர் பந்து வீசி முடிப்பதற்குள் கிரீஸை விட்டு வெளியேறும் ரன்னரை ரன் அவுட் செய்வது இதுவரை விதி 41 ன் கீழ் நியாயமற்ற விளையாட்டு (விதி 41.16) என்று இருந்தது.

இனி இது நியாயமற்ற விளையாட்டு என்ற விதியில் இருந்து நீக்கப்பட்டு ரன் அவுட் விதிகளுக்கான விதி 38ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.