சென்னை

சென்னையில் நேற்று நடந்த ஐ பி எல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி ஐதராபாத் அணியை 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

நேற்றிரவு 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

முடிவில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் ஆகும். முன்பு 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்ததே இறுதி ஆட்டத்தில் குறைந்த ஸ்கோராக இருந்தது.

கொல்கத்தா தரப்பில் ரஸ்செல் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்  114 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் சுனில் நரின் 6 ரன்னில் வெளியேறினாலும், 2-வது விக்கெட்டுக்கு ரமனுல்லா குர்பாசும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து வெற்றிப்பாதையை எளிதாக்கினர். குர்பாஸ் 39 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். வெங்கடேஷ் அய்யர் 24 பந்துகளில் அரைசதம் விளாசியதுடன் வெற்றிக்குரிய ரன்னையும் எடுத்தும் சுபம் போட்டார்.

இருதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட இறுதியில் வெங்கடேஷ் அய்யர் 52 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2012, 2014-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.  நேற்றைய ஆட்டத்தை 33 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.