லக்னோ:

உ.பி. மாநில ஷியா வக்பு வாரிய தலைவராக இருப்பவர் வசீம் ரிஸ்வி. இவர் ராம ஜென்ம பூமி தலைமை பூசாரி ஆச்சாரிய சத்யேந்திர தாஸை சந்தித்து பேசினார். இதன் பின்னர் வசீம் ரஸ்வி கூறுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாபர் மசூதி கட்ட வேண்டும் என்று கூறுபவர்கள் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷூக்கு செல்லுங்கள்.

இத்தகைய இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி என்ற பெயரில் ஜிகாத் பரப்ப நினைப்பவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வேண்டும். அடிப்படைவாத இஸ்லாமிய மதகுருக்கள் இந்தியாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டும்’’என்றார். .

இது குறித்து ஷியா உலெமா கவுன்சில் தலைவர் இப்திகார் உசைன் இன்குலாபி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ரிஸ்வியின் இந்த கருத்து மதவாதத்தை தூண்டும் வகையில் இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும். வக்பு சொத்துகளை அபகரித்துக் கொண்டு சட்டவிரோத முறையில் விற்க முயற்சித்த ரிஸ்வி ஒரு குற்றவாளி. இவர் மீது சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க நாடகம் நடத்துகிறார்’’ என்றார்.