லக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே.

உ.பியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமாஜ்வாதி வேட்பாளர்களை முலாயம் அறிவித்தார். இதில் தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டதாகக் கூறி, தானும் ஒரு வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்  அகிலேஷ்.

இதையடுத்து அகிலேஷை கட்சியைவிட்டு முலாயம் நீக்கினார். பிறகு சமாதானமாகி, நீக்க அறிவிப்பை வாபஸ் பெற்றார் முலாயம்.

முதல்வரும் தனது மகனுமான அகிலேஷை கட்சியில் இருந்து முலாயம் நீக்கும் அளவுக்கு, சமாஜ்வாதியில் மோதல் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அளவுக்கு பிரச்சினை ஏற்பட,  முலாயமின் இரண்டாவது மனைவி, சத்னா குப்தாவும், இரண்டாவது மகன், பிரதீக் யாதவின் மனைவி, அபர்ணா குப்தாவும் காரணம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஓராண்டுக்கு முன்பே, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியை, அபர்ணாவுக்காக, முலாயம் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. இந்தத் தொகுதியில், ஓராண்டாக, அபர்ணா, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அகிலேஷ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் கூட, லக்னோ கன்டோன்மென்ட் தொகுதி இடம் பெறவில்லை.

ஆனாலும், அகிலேஷ்யாதவ், தன்னிச்சியைக செயல்படுவதாகவும், தந்தையும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயமை மதிப்பதில்லை என்றும் அபர்ணா தொடர்ந்து கூறி வந்ததாகவும், இவரே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் லக்னோவில் தகவல் பரவி உள்ளது.