டில்லி

ந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

தேசிய குற்றங்கள் பதிவு இயக்கம் சென்ற ஆண்டு நடைபெற்ற குற்றங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  மாநில வாரியாகவும் குற்றங்கள் வாரியாகவும் தொகுக்கப்பட்ட இந்தப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பட்டியலின்படி பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசம் குற்ற எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. சென்ற 2016 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த மொத்த குற்றங்களில் 9.5% குற்றங்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மாநகரங்களில் டில்லியில் அதிக குற்றங்கள் நடந்துள்ளது. குற்ற எண்ணிக்கை தரவரிசையில் தலைநகர் டில்லியில் அதிக குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் 2.9% அதிகரித்துள்ளது.  பலாத்கார குற்றங்கள் 12.4% அதிகரித்துள்ளது.  பலாத்கார குற்றங்களில் உத்திரப்பிரதேசத்தில் 4882 (12.5%) குற்றங்களும், மத்தியப் பிரதேசத்தில் 4816 (12.4%) குற்றங்களும் நடந்துள்ளன.  அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4189 (10.7%) பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 5.5% அதிகரித்துள்ளது.  அதில் 10426 (25.6%) குற்றங்கள் உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அடுத்ததாக பீகாரில் 5701 (14%) குற்றங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5134 (12.6%) குற்றங்களும் நடந்துள்ளன.