புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் காலாவதி அஜெண்டா பட்டியலிலிருந்து, காஷ்மீர் விஷயத்தை நிரந்தரமாக நீக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் அவ‍ையை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

காஷ்மீர் விஷயத்தை, ஒரு ‘பகுத்தறிவற்ற ஆர்வம்’ என்றும் இந்தியா வர்ணித்துள்ளது.

ஒருநாடு தான் சர்வதேச அமைதிக்குப் பங்காற்றுவதாக உலக அரங்கில் தன்னைக் காட்டிக்கொண்டு நாடகமாடுகிறது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால், உலகளாவிய பயங்கரவாதத்திற்கு பெரியளவில் பங்களிக்கும் ஒரு நாடாய் அது திகழ்கிறது என்று பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ளது இந்தியா.

பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு ஆன்லைன் முறையிலான கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் விஷயத்தில் தனது தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டுகிறது என்ற புகார் ஏற்கனவே  உள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில், காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு, பாதுகாப்பு கவுன்சில் 3 முறை கூடியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில்தான் இந்தியாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.