டில்லி

மத்திய அமைச்சரவை இன்று நான்காம் தொழிலாளர் நல விதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியத் தொழிலாளர் சட்டம் பல  பிரிவுகளாக இருந்தன.   அவற்றை மாற்றி அனைத்தையும் ஒரே சட்டமாக இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது.   அதன் படி முந்தைய சட்டங்கள் ஒவ்வொரு விதியாக மாற்றப்பட்டு இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு வருகிறது.

மொத்முள்ள 44 சட்டப்பிரிவுகள் நான்கு விதிகளுக்குள் அமைக்கப்பட்டு வருகிறது.  இதில் முதல் விதியான ஊதிய விதி ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றுள்ளது.   அதன் பிறகு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் பணி நிலைமைகள் உள்ளிட்ட  இரண்டாம் மற்றும் மூன்றாம் விதியும் மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நான்காம் விதி ஒப்புதல் பெற்றுள்ளது.  இந்த விதி மசோதாவை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் ஒப்புதலுக்குத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   இந்த தகவலை இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.