சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,  நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு  மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதனால்,  மேலும் 850 இடங்களுக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது,

தமிழ்நாட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மருத்துவமனை மருத்துவக்கல்லூகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம்.  ஆனால்,  திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட பணிகளை  மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இன்னும் 10நாட்களில் அந்த கட்டட பணிகள் முடிந்துவிடும். இந்த 4 கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், தலா  100 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

தற்போது,  விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவமனைகளில் தலா 150 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கைக்கும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 100மாணவர்கள் என மொத்தம் 7மருத்துவக்கல்லூரிகளில்  850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

மக்களை தேடி மருத்துவம் மூலம் தினமும் 50,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட  110அறிவிப்புகளில் ஒன்றான, கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க இருக்கிறார். பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது,மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16சிறப்பு துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் (அக்டோபர் 2, ஞாயிறு) 12,500 கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், மெகா தடுப்பூசி திட்டம் இல்லை. அடுத்த வாரம் ஞாயிறு அன்று மிகப்பெரிய அளவில் முகாம் அமைக்கப்படும்.

கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.