சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்குகிளப்புகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

கிளப்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடை விதிக்க கோரி கிளப் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்iக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இன்று விசாரித்தார். இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, கிளப் உரிமையாளர்களின்  கோரிக்கையை நிராகித்த நீதிபதி, கிளப்கள் மற்றும் சொசைட்டிகளில் ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள . பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவற்றின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.