சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, செப்.17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர்  1ம் தேதி விருப்ப கல்லுாரிகளுக்கான பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது.   ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேர். மொத்தம் 1.52 லட்சம் இடங்களுக்கு 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வானது, சிறப்புப் பிரிவுக்கு செப்.17 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து  செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் பொதுப்பிரிவனருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  துணை கலந்தாய்வு அக்.19-ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்.24-ம் தேதியும் நடக்கும். அக்.25-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது.இதில்,அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, பொது பிரிவில் சேரும் மாணவர் களுக்கான, கட்டணம் செலுத்தும் வசதி  27ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான  தரவரிசை பட்டியலில், 14 ஆயிரத்து 788 வரை உள்ளவர்கள் மட்டும், 30-ம் தேதி மாலை 5:00 மணி வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாணவர்களுக்கு, அக்டோபர்  1-ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளுக்கான பதிவு துவங்கி, 2-ம் தேதி முடிகிறது. 3-ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 5ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும்.

இதையடுத்து, தரவரிசைபட்டியலில் இரண்டு, மூன்று, நான்காம் கட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு, படிப்படியாக கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் விருப்ப பதிவு நடந்து, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.