டெல்லி: மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 5ஜி தொலைத் தொடர்பு, சோலார் திட்டங்கள் ஊக்குவிப்பு; ஒரே நாடு ஒரே பதிவு திட்டம், இ-பில் சிஸ்டம், சர்வதேச தீர்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில்,  2023ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ.44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும்  ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் (One Nation, One Registration) விரைவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும்.

மத்திய அமைச்சகங்களில் காகித பயன்பாட்டை முற்றாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில், மத்திய அமைச்சகங்களில் காகிதமில்லா இ.பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நடப்பாண்டிற்குள்  5ஜி திட்டம் கொண்டுவரப்படும் என்றும், அதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் விட நடவடிக்கை தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

ராணுவம் உள்பட  பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளை, விவகாரங்களை தீர்த்து வைக்க சர்வதேச தீர்வு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.