மும்பை: நாடு முழுவதும் இயங்கும் பொதுத்துறை வங்கிகள் விரைவில் ஒரேவிதமான நேர ஒழுங்கில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்தம் மற்றும் வங்கிகள் இணைப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இந்த திட்டம் அமைவதாக கூறப்படுகிறது.

வங்கியாளர்களின் குழுவானது, ஒவ்வொரு பிராந்தியமும் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை, காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை என்ற நேர வரையறையில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்துகொண்டு, வாடிக்கையாளர்களுக்கு அணுகுதலை எளிதாக்க வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த நேர ஒழுங்குகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், வங்கிகள் வேறு நேர ஒழுங்கையும் தேர்வுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில், ஒரு பொதுத்துறை வங்கி ஒரு நேரத்திலும், மற்றொரு பொதுத்துறை வங்கி இன்னொரு நேரத்திலும் இயங்கினால், பொதுமக்கள் குழப்பமடைவார்கள் என்பதற்காகவே இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் வாழிடங்களில், வங்கிகள் காலை 8 மணிக்கே திறக்கப்படலாம் மற்றும் மாலையிலும்கூட இயங்கலாம். ஆனால், அதில் ஒரேவிதமான நேர ஒழுங்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.