உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை களமிறங்க அதிபர் புடின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.

உயர்கல்விக்காக உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாகும் நிச்சயமற்ற நிலையிலும் உள்ளது.

இதனால் கலக்கமடைந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இந்தியா திரும்ப விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள டெர்னோபில் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். பல்கலைகழகமும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது. உக்ரைனில் சுமார் 20,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் அங்கு தங்குவது தேவையற்றது என்றும் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் இரண்டு முறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இரண்டாவது முறை அறிவிப்புக்குப் பின் இந்தியா திரும்ப அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முயற்சித்து வருகிறார்கள், தவிர உக்ரைன் பல்கலைக்கழங்களும் மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல மறுப்பேதும் கூறாமல் அனுமதித்து வருகிறது.

இந்தியா திரும்ப தேவையான வழிமுறைகள், புதிய அறிவிப்புகள் மற்றும் அண்மைத் தகவல்களுக்கு வெளியுறவுத் துறையின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்றுமாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இந்திய மாணவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் ஏற்கனவே வீட்டுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர், மீதமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய முயற்சிக்கின்றனர்.

கீவில் இருந்து இந்தியாவிற்கு விமான டிக்கெட்டின் விலை சுமார் 25-30,000 ரூபாய். ஏர் இந்தியா தற்போது மூன்று சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. ஆனால், டிக்கெட்டுகளின் விலை, 60,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முன்பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் பிப்ரவரி 22, 24 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

நாடு திரும்ப முயலும் மாணவர்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்னதாக முன்பதிவு செய்யவேண்டிய நிலை உள்ளது.

உக்ரைன் நிலைமையை கருத்தில் கொண்டு சில மாணவர்களின் பெற்றோர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தங்கள் பிள்ளைகளை நாடு திரும்ப அழைப்பு விடுப்பதாகவும், சில பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என்றும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் நேரடி வகுப்புகளுக்கு வந்து சேரவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்