மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு அல்வா வழங்குவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் “குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தைக் கையாள்வதற்காக மதுரை – சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேர அட்டவணையில் நாளை முதல் (அக்டோபர் 1-ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய வைகையின் பயண கால அட்டவணை ரயில்வேயின் தேசிய ரயில்கள் விசாரணை முறைமை (National Train Enquiry System – NTES) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக அக்டோபர் 1-ம் தேதி முதல் மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் காலை 6.40-க்கே புறப்பட்டு பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையிலிருந்து வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மதுரையைச் சென்றடையும்.

புதிய மாற்றத்தின்படி தற்போதைய பயண நேரத்தை விட மேலும் 15 நிமிடங்கள் அதிகரிக்க உள்ளது.

கடந்த 46 ஆண்டுகளாக மதுரை மக்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலாக ஓரளவு குறைவான கட்டணத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செப். 24 ம் தேதி காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் மதுரை மக்களின் மகிழ்ச்சியைக் குலைத்துள்ளது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கும் பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் நாளை முதல் மாற்றம்… சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகாரப்பூர்வமாக அதிகரிப்பு…