சென்னை

பாஜகவின் எக்ஸ் வலைத்தள பதிவுக்குத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தி தெரியாது போடா என பதில் அளித்துள்ளார். 

இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . இன்றைய விழாவில் பிரதமர் மோடி உள்படப் பல முக்கிய தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையொட்டி தேசிய பாஜகவின் எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ”இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். இவர்கள் ராமர் கோவிலை எதிர்த்து, சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்” என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர்.

இந்த பாஜகவின் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.