புதாபி

ப்கான் அதிபர் மற்றும் அவர் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைக்க உள்ளனர்.  இதையொட்டி ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.  அவர் ஓமன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

ரஷ்ய நாட்டு ஊடகங்கள் அஷ்ரஃப் கனி ஒரு ஹெலிகாப்டரில் தனது பணத்துடன் நாட்டை விட்டு ஓடி விட்டதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.    மேலும் தாலிபான்கள் அந்த ஹெலிகாப்டரை பிடிக்காமல் இருப்பதற்காகச் சிறிது பணத்தை அவர் விட்டு விட்டுச் சென்றதாகவும் அந்த தகவல் கூறுகின்றது.

அஷ்ரஃப் கனி கடந்த 16 ஆம் தேதி தனது முகநூலில் ”தற்போது தாலிபான்கள் வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கின்றனர்.  அவர்கள் தங்களது மற்றும் ஆப்கானிஸ்தான் பெருமையை காக்க வேண்டும். அல்லது அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும்.  நான் இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க அங்கிருந்து வெளியேறினேன்” என  பதிந்துள்ளார்

இன்று ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டு விவகார அமைச்சரவை அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.   அதே வேளையில் கனி எந்த நகரத்தில் தங்கி உள்ளார் என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை.   ஊடகங்களில் கனி அபுதாபியில் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.