செங்கல்பட்டு: செங்கல்பட்டு போலீஸ் நிலையம் எதிரே நேற்று வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த ரவுடிகள் 2 பேர் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை செங்கல்பட்டு போலீஸ்நிலையம் எதிரே  உள்ள மார்க்கெட் பகுதியில் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட துடன், அங்கு கடை வைத்திருந்த  காய்கறி கடைக்காரரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  விசாரணையில்,  செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே) அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டினர். கார்த்திக்கின் தலையை உருத்தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

இந்த கொலை கும்பல், அடுத்து,  செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவர மகன் மகேஷ் (22) என்பவரை அவரது வீட்டுக்குள் புகுந்து,  சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இந்த இரட்டை கொலை சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தையே உலுக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் குறித்து விசாரித்து வந்தனர்.கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து, அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகள் 2 பேர், உத்தரமேரூர் பகுதியில் பதுங்கி இருந்ததை அறிந்த காவல்துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். திருபுலிவனம் பகுதியில் பதுங்கியிருந்த ஜெசிகா, மாதவன், மொய்தீன், தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களில், தினேஷ், மொய்தீன் ஆகியோர் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசிவிட்டு  து தப்பிக்க முயன்றபோது,  தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தினேஷ், மொய்தீன் ஆகிய 2 ரவுடிகள் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.