பீஜிங்

ல்வி நிறுவனங்கள் லாப நோக்கமற்றவை என பதிவு செய்ய வேண்டும் என சீனா சட்டம் இயற்றி உள்ளது.

உலகெங்கும் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.  அதற்கேற்றார் போல் பல பள்ளிகளில் இசை, நடனம் உள்ளிட்டவைகளை கற்க வார இறுதி மற்றும் விடுமுறைக் கல்வி என்னும் பெயரில் தனித்தனி வகுப்புக்கள் நடத்தப்பட்டு அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர்.  

இந்நிலையில் சீன அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.  அந்த சட்டத்தில்,  ”சீனாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தங்கள் நிறுவனம் லாப நோக்கமற்றவை எனப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  கண்டிப்பாகக் கல்வி நிறுவனங்கள் லாப நோக்குடன் இயங்கக் கூடாது.  பள்ளிக் கல்வியைத் தவிர வேறு பாடங்களைப் பள்ளி இயங்காத நேரம் அல்லது நாட்களில் பயிற்றுவிக்கக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இனி சீனாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வார இறுதி, பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் வகுப்புக்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.   சீனாவில் தற்போது கல்வி நிறுவனங்கள்  வருடத்துக்கு சுமார் 2600 கோடி டாலர்கள் வரை வருமானம் ஈட்டு வரும் நிலையில் இந்த சட்டம் அந்த நிறுவனங்களுக்குப் பேரிடியாக இருக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.