கொழும்பு

லங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்றைய முதல் டி 20 ஆட்டத்தில் இலங்கையை வெற்றி கண்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் இலங்கையை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  நேற்று டி 20 போட்டிகள் தொடங்கின.   நேற்று இந்த போட்டி கொழும்பு வில் நடந்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.  

முதல் பந்திலேயே இலங்கையில் சமிரா பிரிதிவி ஷாவை ஆட்டம் இழக்க செய்தார்.  அடுத்து  சூரியகுமார் யாதவ், ஷிகர் தவான் ஜோடி 8 ஓவர்களில் 62 ரன்களைச் சேர்த்தது. ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 எடுக்க இன்னொரு முறை பிரமாதமாக இடைவெளிகளில் பந்தை அடித்து அற்புதமாக ஆடிய சூரியகுமார் யாதவ் 34 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் ஒரு அபார சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து ஹசரங்காவின் கூக்ளியில் எல்.பி அவுட் ஆனார்.   ஷிகர் தவான் (46), சஞ்சு சாம்சன் (27), சூரியகுமார் யாதவ் (50) ஆகியோர் பிரமாதமாக ஆட இந்தியா 15.2 ஓவர்களில் 127/4 என்று வந்தது. கடைசியில் இஷான் கிஷன் 20 ரன்கள் எடுக்க இந்திய அணி 164/5 என்று இந்தப் பிட்சில் விரட்டுவதற்கு கடினமான ஸ்கோரை எட்டியது.

இலங்கை அணி முதல் 2 ஓவர்களில் 20 ரன்களை விளாசியது. குருணால் பாண்டியா வந்தவுடன் மினோத் பனுகா எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் அவிஷ்கா பெர்னாண்டோ பிரமாதமாக ஆடினார் ஸ்கோர் 5 ஓவர்களில் 44 ரன்கள் ஆனது. அவிஷ்கா பெர்னாண்டோ (26), புவனேஷ்வர் பந்தை டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை 7.1 ஓவர்களில் 50/3 என்று ஆனது.

இந்திய அறிமுக வீரரான தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 2 ரன்களையே தன் முதல் ஓவரில் கொடுத்தார். யஜுவேந்திர செகலின் அருமையான பந்தில் தனஞ்ஜய டிசில்வா ஆட்டமிழந்தார். இலக்கை எட்ட முயன்ற இலங்கை அணி சீரான முறையில் விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது.

புவனேஷ்வர் குமார் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் குருணால் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, செகல், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.  இந்தியா இந்த போட்டியின் மூலம் தொடரில் 1:0  என்னும் கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.