சென்னை,

திமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கூவத்தூர் சென்று அங்கு தங்கியிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை நேற்று நள்ளிரவு கட்சியில் சேர்த்து, இன்று காலை அவருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியும் கொடுத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா.

சசிகலா இன்று சிறைக்கு செல்வதையடுத்து, தனது உறவினருக்கு இந்த பதவியை கொடுத்துள்ளதால் கட்சியினரிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து சசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டிடிவி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  கட்சியின் அமைப்பு செயலாளரான கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் இன்று கூவத்தூர் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு தங்கியுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்  காஞ்சிபுரம் மாவட்ட ஐ.ஜி. தாமரைக்கண்ணன், மற்றும் எஸ்.பி. முத்தரசி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மீண்டும் கோல்டன் பே ரிசார்டில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ கொடுத்துள்ள கடத்தல் வழக்கு குறித்து அங்கு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகிறது.

இதன் காரணமாக கூவத்தூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. I