டெல்லி:

ன்லைனில் மதுபானங்கள் விற்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறித்ததுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் திறந்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,   சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டதால் டாஸ்மாக் கடையை திறக்க தடைகோரிய வழக்கு தேவையற்றது, என தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.

இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆன்லைனில் மதுபான விற்பனை மற்றும் விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.