சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, டிரோன்கள் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகள் கடந்த அண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தபபட்டது. அதன்படி,சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து டிரோன் மூலம் தெளிக்கப்படுகிறது.

இனிமேல் சென்னை மாநகராட்சி தரப்பில், டிரோன் மூலம் மருந்து தெளிக்கம் பணிகளை மேற்கொள்ள  சென்னை  மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக, டிரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க உள்ளதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள  திருநங்கைகளுக்கு ஓய்வுபெற்ற அதிகாரி கே. ஆர்.ஸ்ரீகாந்த் தலைமையில் பயிற்சி வழங்கப்படுள்ளது.

இதுகுறித்து கூறிய ஸ்ரீகாந்த், ‘சென்னை மாநகராட்சி என்னை இதுதொடர்பாக தொடர்பு கொண்ட போது, திருநங்கைகளை ஏன் நியமிக்க கூடாது என கேட்டதாகவும், இதுதொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு 30 திருநங்கைகளை தேர்வு செய்தோம். எனக்கு தெரிந்தவர்களை வைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்தோம். இந்த ஒட்டுமொத்த பயிற்சியும் ஆங்கிலத்தில் இருப்பதால், 1 மாதம் வரை ஆங்கில மொழி பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 15 திருநங்கைகளை தேர்வு செய்து வைத்துள்ளோம்.  15 பேரில் முதல் 7 பேரின் பெயர்களை சென்னை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் யாரும் தகுதியற்றவர் கிடையாது. சரியான வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள்.

இவ்வாறு கூறினார்.