சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர்,  `ஆர்டர்லி’ என்ற  முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டரியின் பணியானது, உயர்அதிகாரிகளின்  போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மட்டுமின்றி அவர்களின் வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். பொதுவாக, காவல்துறையில் எடுபிடி வேலை என்பதுதான் ஆர்டர்லி வேலை என்று பேசப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், இன்னும் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை செயலாலர் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது என்றும்  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.