சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும்  பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்.

நாட்டின் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில், இன்று சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த யஷ்வந்த் சின்ஹாவிற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை  5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார். தொடர்ந்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.  மேலும் கூட்டனி கட்சி எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோரையும் சந்திக்கின்றார்.

அதனை தொடர்ந்து வரவேற்புகளை முடித்துக் கொண்டு இரவு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் நாளை (ஜூலை 1ம் தேதி) காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராய்ப்பூர் புறப்பட்டு செல்கிறார்.