30 நாட்களில் 50 சதவீதத்திற்கு குறைவாக முன்பதிவு செய்யப்பட்ட வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணத்தை 25% வரை குறைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்தந்த மண்டலங்களில் இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவுக்கு ஏற்ப அதற்கான கட்டண சலுகையை வழங்க ரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தவிர, இந்த கட்டண சலுகை சேர் கார், எக்சிகியூடிவ் வகுப்பு இருக்கைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேவை மற்றும் எந்தமாதிரியான ரயில்களுக்கு மக்களுக்கு வரவேற்பு உள்ளது என்பதை ஆராயாமல் வந்தே பாரத் போன்ற கட்டணம் உயர்ந்த அதிவிரைவு சொகுசு ரயில்களை நாடுமுழுவதும் மூலைமுடுக்கில் எல்லாம் இயக்க பச்சை கொடி காட்டிய நிலையில் ரயில்வே வாரியம் நடத்திய ஆய்வில் பெரும்பாலான ரயில்களில் இருக்கைகள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஜூன் மாதம் போபால்-இந்தூர் வந்தே பாரத் ரயிலில் 29 சதவீத இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் இந்தூர்-போபால் ரயிலில் 21 சதவீத இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து போபால்-ஜபல்பூர், இந்தூர்-போபால் மற்றும் நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த சலுகை கட்டணம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளபோதும் இந்த ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கட்டண சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் விசேஷ நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.