1977-ஆம் ஆண்டு சமையல் கலைஞர்களுக்கான ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபர் கில்ஸ் ப்ரகார்ட் என்பவரது முயற்சியின் பேரில் உலகின் மிகப்பெரிய தலைவர்களுக்கு சமைக்கும் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஓரிடத்தின் ஒன்று கூடும் பழக்கம் ஏற்பட்டது. இந்த அமைப்புக்கு Club des Chefs des Chefs (CCC) என்று பெயரிடப்பட்டது. இதில் இப்போது 25 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா இவ்வமைப்பில் கடந்த 1990-ஆம் ஆண்டு இணைந்தது.

ccc

இவ்வாண்டு இவ்வமைப்பின் கூட்டம் டெல்லியில் நடபெறவிருக்கிறது. இம்மாநாட்டிற்கு உலகின் 18 பெருந்தலைவர்களுக்கு சமைக்கும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில் ஒபாமாவின் சமையல்காரர் கிரிஸ்டெட்டா கோமெர்ஃபோர்ட், இங்கிலாந்து ராணி எலிசபத்தின் சமையல்காரர் மார்க் ஃப்:ளாங்கன், கடந்த 40 ஆண்டுகளாக பிரான்ஸ் அதிபரின் சமையல்காரராக இருக்கும் பெர்னார்ட் வாசன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
உலக பெருந்தலைவர்களின் சமையல்காரர்களிடையே கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் இம்மாநாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையின் தலைமை சமையற் கலைஞர் மோண்ட்டு சாய்னி ஏற்பாடு செய்திருக்கிறார். சமையற் கலைஞர்கள் ஒன்று கூடி டெல்லியில் முக்கிய தலைவர்களுக்காக சமைக்கிறார்கள். அதுமட்டுமன்றி கைலாஷ் சத்யார்த்தி என்பவர் நடத்தும் ஒரு குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் அவர்கள் விருந்து படைக்கிறார்கள். அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடனும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.