தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிக கனமழை பெய்துள்ளது.  ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.இதனால் திமுகவினர் உதவ முன்வரவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில்,  மக்களை மீட்க உடனடியாக களத்திற்கு வந்த திமுக தோழர்களுடன் திமுக எம்.பி. கனிமொழியும் களத்தில் இறங்கினார்.  உடன் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கட்ந்த 24 மணி நேரத்தில் 932 மி. மீ அளவு மழை பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மழைப்பதிவு தான் தமிழகத்தில், 24 மணி நேரத்தில் அதிக அளவு பதிவாகிய மழை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அடுத்த காக்காச்சி பகுதியில் பதிவாகிய மழையைவிட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையதல் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.பல பகுதிகள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை-பாபநாசம், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகர்ப் பகுதிகளில் இருந்து கிராமங்களை இணைக்கும் அரசு பேருந்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை-தூத்துக்குடி இடையே இயங்கும் முத்துநகர் விரைவு ரயில், புது டெல்லி – கன்னியாகுமரி இடையேயான திருக்குறள் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.

இதைத்தொடர்ந்து,   தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதாலும், உபரிநீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது. மேலும், பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர கால எண்கள்:

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகளுக்கு கீழ் காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 94458 54718, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி 101 மற்றும் 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 394 மி.மீ., மழை பெய்துள்ளது.

சாத்தான்குளத்தில் 306.40 மி.மீ., மழையும், திருச்செந்தூரில் 185 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதர இடங்களில் 12 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரி): தூத்துக்குடி 40.70, காயல்பட்டினம் 124, குலசேகரன்பட்டினம் 109, கோவில்பட்டி 138, கழுகுமலை 52, கயத்தாறு 110, கடம்பூர் 155, எட்டயபுரம் 64.60, விளாத்திகுளம் 64, காடல்குடி 27, வைப்பார் 68, சூரன்குடி 65, ஓட்டப்பிடாரம் 65, மணியாச்சி 90, வேடநத்தம் 35, கீழஅரசரடி 25 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 12 மணி நேரத்தில் 2117.70 மி.மீ.,யும், சராசரியாக 111.46 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு திமுக தொண்டர்கள் உதவ முன்வர வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று திமுக தொண்டர்கள் பல இடத்தில் களமிறங்க மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை மீட்க உடனடியாக களத்திற்கு வந்த திமுக தோழர்களுடன் திமுக எம்.பி. கனிமொழியும் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுக தொண்டர்கள், நிர்வாககிள் இணைந்துள்ளனர்.  இதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகனமழை பதிவாகியுள்ள இடங்கள் (செண்டி மீட்டரில்)

⛈️ காயல்பட்டினம் – 95

⛈️ திருச்செந்தூர் – 69

⛈️ பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீ வைகுண்டம் -62

⛈️ திருச்செந்தூர் AWS – 61

⛈️ ஒட்டபத்திரம் – 37

⛈️ கடம்பூர் – 37

⛈️ குலசேகரன்பட்டினம் – 33

⛈️ கயத்தாறு -27

⛈️ விளாத்திகுளம் – 26

⛈️ வைப்பார் – 22

⛈️ கழுகுமலை – 19

⛈️ கோவில்பட்டி – 53

⛈️ மணியாச்சி – 42

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ஐகிரண்டு மருத்துவமனை – வீடியோஸ்