சென்னை,

த்திய அரசு அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை தமிழ்நாடு மருந்து வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

நாளை மருந்துகள், உணவு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாக இருப்பதால் அத்தியாவசிய பொருளான மருந்து மாத்திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும், ஜி.எஸ்.டி., முறையை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அதையடுத்து ஒவ்வொரு பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இதுவரை, 5 சதவீத வரி கட்டி வந்த ஓட்டல்கள், 18 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் மாநில ஓட்டல் உரிமையாளர்கள், நாளை, ‘ஸ்டிரைக்’ அறிவித்து உள்ளனர்.

இதன்படி, ‘தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் ஓட்டல்கள் மூடப்படும்’ என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர், வெங்கடசுப்பு தெரிவித்து உள்ளார்.

அதேபோல, ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், ‘உயிர் காக்கும் மருந்துகள் பெறுவதில் சிரமம் ஏற்படும்; போலி மருந்துகள் அதிகம் வரும்’ என, மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அனுமதியை கைவிடக் கோரி, நாடு முழுவதும், நாளை ஸ்டிரைக்கும் அறிவித்து உள்ளனர். இதனால், தமிழகத்தில், மருத்துவமனைகளில் செயல்படும், 3,000 கடைகள் தவிர்த்து மற்ற, 33 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படுகின்றன.

எனவே, நாளை சாப்பாடு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக மருந்து வணிகர்களுடன் பேச்சு நடத்திய தமிழக அரசு, ‘அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, வலியுறுத்தி உள்ளது. ஆனால், நாளை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வதில்  மருந்து வணிகர்கள் உறுதியாக உள்ளனர்.