சென்னை,
த்திய அரசு பிறப்பித்துள்ள மாடு விற்பனை, மற்றும் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற ஜூன் 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நெல்லை சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்.

சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்பதாக சொன்னார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விலையை 50 சதவீதம் அதிகரித்து தருவதாகவும் கூறினார்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாகவும் கூறினார்.

ஆனால் அவர் கூறிய எந்த அறிவிப்புமே இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

மேலும், பண மதிப்பு இழப்புக்கு பிறகு, பணப்புழக்கமானது அதிகரிக்கும் என்றார். ஆனால், பணப்புழக்கம் பணக்காரர்களின் கையில் தான் உள்ளது.  ஏழைகளிடம் பணம் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசு மீனவர்களை துன்புறுத்துகிறது. இதற்கு தீர்வு காணாமல் அதற்கு மாறாக இந்தி திணிப்பு, ராமர் கோவில் பிரச்சனை, மதவாத தூண்டுதல், மொழிவாரி பிரச்சனை, பா.ஜ.க.ஆட்சி இல்லாத மாநிலத்தை மிரட்டுவது போன்ற தேவையில்லாத நடவடிக்கையில் தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது நாட்டு மக்களின்  உணவு பழக்க வழக்கத்திலும் கை வைத்துள்ளது. தனி நபரின் உரிமையில் தலையிடு கிறது.   மாட்டு இறைச்சியை வெளிநாட்டினர் சாப்பிடுவதற்காக ஏற்றுமதி செய்யலாம். ஆனால் நம் நாட்டு மக்கள் சாப்பிடக் கூடாதா? தனிமனிதர் உணவு பழக்கவழக்கங்களில் அரசு சட்டத்தின் மூலம் நுழைய முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் நாளை ( 30-ந் தேதி) காங்கிரஸ், தி.மு.க., தி.க. மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற இருக்கிறது. அதையடுத்து  ஜூன் 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கூறினார்.

தமிழக அரசை பொறுத்த வரை ஜெயலலிதா என்றைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாரோ? அன்று முதல் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல், சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் கோஷ்டி பூசல் இப்படிதான் உள்ளது.

ரஜினிகாந்த் எனது நல்ல நண்பர் எனக்கு தெரிந்தவரை ரஜினிகாந்த் எந்த கட்சியுடனும் சேரமாட்டார். அவர் தனிக்கட்சி தொடங்கினால் காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம்.

கமல்ஹாசன் வாழும் நடிகர் திலகம். அவருக்கு பேசுவதற்கு உரிமை உண்டு. அவரை பற்றி கருத்து கூற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.