சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா  கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.  சென்னையில் 47,77,906 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 3,43,738 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மற்றவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 31 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 31 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 39,32,113 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,33,219 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,79,601 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 32-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக ரெயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சென்னையில் இதுவரை 47,77,906 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 3,43,738 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 44,34,168 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மேயர் பிரியா தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.