சென்னை: மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டம் 2ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பூஸ்டர் டோஸ் போட முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்த  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த என் அன்பான சகோதர, சகோதரிகளே. கோவிட் தொற்று நோய் இன்னமும் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர்.

நமக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்வதே பாதுகாப்பாகும். இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொடரும் கோவிட் தொற்றைக் கருத்தில் கொண்டு, நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை  றிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நினைவாக 75 நாள்கள் நடைபெறுகிறது. ஆகவே பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.