2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது.

கொரோனா பரவல் இரண்டாவது அலையை எதிர்கொண்டுவரும் ஜப்பான் அரசு, ஒலிம்பிக் போட்டிகளையும் பாதுகாப்பாக நடத்துவதற்கு உண்டான வழிமுறைகளையும் மேற்கொண்டுவருகிறது.

துவக்க விழாவுக்கு 20,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும், மற்ற போட்டிகளை காண 10,000 பார்வையாளர்களையும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அதைவிட குறைவாகவும் அனுமதிப்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், போட்டியை காண வருபவர்கள் முககவசம் அணியவேண்டும், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடங்கி கொரோனா வைரசுக்கு எதிரான பல்வேறு பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டும், மறுப்பவர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுடன் அவர்களின் டிக்கெட்டுக்கு உண்டான பணமும் திருப்பி அளிக்கப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் போட்டியை காண வரும் போது குறைவான பொருட்களுடன் வரவேண்டும் என்றும், சில பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், அனுமதிக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்க ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விதிகளை ஏற்றுக்கொண்டு உள்ளே வருபவர்கள், கட்டாயம் மது அருந்தி இருக்க கூடாது, தனது அருகில் இருக்கும் பார்வையாளர்களுடன் கைகுலுக்கவோ, கட்டிப்பிடிப்பதோ அல்லது வேறு எந்த சம்பாஷணையிலும் ஈடுபடக்கூடாது.

போட்டியில் தங்கள் ஆதரவு வீரர்கள் வெற்றி பெற்றால், கூச்சலிடுவதோ, துணிகளை கையில் பிடித்து அசைத்து ஆரவாரம் செய்வதோ கூடாது, வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக நூலகத்தில் நுழைவது போன்ற இந்த கட்டுப்பாடுகளை பார்வையாளர்களுக்கு விதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் சந்தோசத்தை மனதிற்குள்ளேயே வைத்து மகிழ்ந்து கொள்ளவேண்டும் வேண்டுமானால் போட்டி முடிந்து நேராக வீட்டிற்கு சென்று கொண்டாடி மகிழலாம்.