சென்னை

ன்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா  சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27ஆம் தேதி அன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகக் கொண்டாடப்படும்.  முதல்வர் மு க் ஸ்டாலின் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவித்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.   இந்த விழாவில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகள், குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாகக் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குச் சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கோடு மெய் நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார்.

இன்றைய விழாவின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு சுமார் 30 ஆயிரம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது.