சென்னை:  கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

பட்டாசு ஆலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதை தமிழ்நாடு அரசு முறையாக  கண்காணிக்காமல் மெத்தனம் காட்டுவதாலேயே அதிக அளவில் பட்டாசு ஆலை விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.  குறிப்பாக,   பட்டாசு தொழிற்சாலை அதிகமுள்ள விருதுநகர் மாவட்டம்  மற்றும் சிவகாசி பகுதிகளில் மட்டும் ஏராளமான சிறுகுறு உள்பட பல்வேறு வகையான பட்டாசுகளை தயாரிக்கும் ஏராளமான ஆலைகள் உள்ளன. இதை நம்பி அந்த பகுதிகளைச்சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி  சய்யவும்  உச்சநீதிமன்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், ஏராளமான பட்டாசு ஆலைகள் உரிமம் பெறாமலும், போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யாமலும் வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு மாமுல் கொடுத்து தங்களது தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இதை கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையுனர், மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக கூறுப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் சட்டவிரோ தமாக வெடிபொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை தீவிர நடவடிக்க எடுக்கவில்லை என்பதும் விபத்துக்களின்போதுதான் தெரிய வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்,பட்டாசு தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது.   கடந்த 5 ஆண்டுகளில் பட்டாசு ஆலை தீ விபத்துகள் தொடர்பாக 69 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகள் தொடர்பான வழக்குகள் 12 பதிவாகியுள்ளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில்தான்,  சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அண்மையில் செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.   கடந்த ஒரு வாரத்திற்குள்  நடந்த 4வது விபத்து இது என்பதால் பட்டாசு தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாள்வதும்,  தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில்  பட்டாசு உற்பத்தி செய்வது உள்பட பாதுகாப்பு  விதிமீறல்களால் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த சம்பவம் பட்டாசு தொழிலாளர்களில் அவலநிலையையும், அத்தொழிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விவாதங்ளுக்கு வழிவகுத்துள்ளது. சமுக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில், இன்று காலை மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. சிவகாசி காத்த நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(47). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று சிவகாசி அருகே நாரணாபுரத்தில் மகேஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.

இந்த சூழலில்தான் இன்று காலை 6:15 மணி அளவில் பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வெடி மருந்துகள் இருப்பு வைத்திருந்த சல்பர் அறை, கரி தூசி அறை, அலுமினிய பவுடர் அறை மற்றும் ஜென்ரல் ஸ்டோர் ரூம் ஆகிய 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன் வெடி விபத்து நடந்ததால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. நேற்று பட்டாசு உற்பத்தி முடிந்து, மீதமிருந்த மணி மருந்தை இருப்பு வைத்து உள்ளனர். அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே , மே மாதம் 6-ம் தேதி சிவகாசி அருகே செங்கமலபட்டி – நாரணாபுரம் சாலையில் உள்ள பெரியாண்டவர் அலுமினிய பேப்பர் சீவு தூள் கம்பெனியில், சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

அதே நாளில் ஈஞ்சார் பகுதியில் உள்ள மத்தாப்பு தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது.

கடந்த 9 ஆம் தேதி செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டதும்,  கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று (மே.11) காலை நடந்த விபத்தோடு சேர்ந்து கடந்த 6 நாட்களில் 4 விபத்து நடந்துள்ளது. பட்டாசு தொழிலர்கள் மற்றும் உற்பத்தி யாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்தே,   மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும்,  பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்று இயங்குகின்றனவா, தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பட்டாசு ஆலைகள் விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வி.ஏ.ஓ. , மற்றும் போலீசாருக்கு தெரியாமல் உரிமம் இன்றி பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது.  சட்டவிரோத பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் , வெடிமருந்து களை நாட்டு வெடி குண்டுகள் , பிற வெடிபொருட்கள் தயாரிக்க தவறாக பயன்படுத்தப்படலாம். இது மனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும், இதுபோன்ற விஷயத்தில் காவல்துறை, மாசுக்கட்டுப்பாத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

கண்கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்…