அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கு மீதான விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தரப்பில் வாய்தா கேட்கப்பட்டதை அடுத்து, 10வது முறையாக வாய்தா வாங்குவதன் மர்மம் என்ன ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

2015 ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான குறிப்புகள் அடங்கிய டைரியை பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு 2022 ஜூலை 19-ம் தேதி அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் குட்கா வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை நடத்தலாம் என மத்திய அரசும் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்தது.

அந்தக் கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய சிபிஐ தரப்பு மேலும் அவகாசம் கேட்டது.

10வது முறையாக தற்போது சிபிஐ தரப்பில் வாய்தா கேட்கப்பட்டதை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் அதிமுக அமைச்சர் மீதான இந்த வழக்கில் மெத்தனமாக செயல்படுவதாகவும் மத்திய அரசும் சிபிஐ-யும் இணைந்து அமைச்சரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 10வது முறையாக மீண்டும் வாய்தா கேட்பதன் மர்மம் என்ன ? என்று கேள்வி எழுப்பினர்.