திருவண்ணாமலை

இன்று திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி உள்ளது.

உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இன்று கொடியேற்றத்துடன் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. நேற்றைய தினம் விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

இன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் விழாவில் இருந்து 9 ஆம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாடவீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையடுத்து 23 ஆம் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

வரும் 26 ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்குப் பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது..

அன்றைய தினம் இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.