டில்லி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுகிறது.

இந்தியாவின் 13 ஆம் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்துள்ளார்.   இவர்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்ற போதிலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இவர் மேல் நல்ல மதிப்பு உள்ளது.    பலராலும் மிகச் சிறந்த தலைவர் என போற்றப்பட்டு வருகிறார்.

இந்தியாவின் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும்.

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாகக் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது.   இவருடன் இசை மேதை பூபன் ஹசாரிகா மற்றும் சமூக  சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.  இவர்கள் இருவருக்கும் மறைவுக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் இன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை பிரணாப் முகர்ஜிக்கு வழங்குகிறார்.   இது குறித்து பிரணாப் முகர்ஜி, ““எனது நாட்டு மக்களுக்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த கவுரவத்தினை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என தெரிவித்துள்ளார்.

பிரதமர்  மோடி, “நம் காலத்தின் தன்னிகரில்லாத் தலைவர் பிரணாப் முகர்ஜி. தன்னலம் கருதாது, ஓய்வறியாது நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவருக்கு நிகரான அறிவாற்றலும் மதிக்கூர்மையும் வெகுசிலருக்கே கிடைக்கப்பெற்றது. அப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” எனப் பாராட்டியுள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ”பாரத ரத்னா விருது பெறும் பிரணாப் முகர்ஜிக்கு எனது வாழ்த்துக்கள்! நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் தேசக் கட்டமைப்புக்காக ஆற்றிய உழைப்பு அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி காங்கிரஸ் கட்சி பெருமிதம் கொள்கிறது,” எனப் பதிவிட்டுள்ளார்