டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,   காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்  காஷ்மீர் செல்வதற்காக டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் பயணம் செய்தார்.

அவர் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அங்கு சென்று மக்களை சந்தித்து பேசியும், அவர்களுடன் உணவருந்தும் காட்சி தொடர்பான வீடியோ வெளியானது.

இதை கடுமையாக விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபாவின் காங்கிரஸ் கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், தான் காஷ்மீர் சென்று பார்வையிட உள்ளதாக தெரிவித்து, இன்று ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றார். ஆனால், விமான நிலையத்தில் இறங்கிய அவரை பாதுகாப்பு படையினர்  விமான நிலையத்தை விட்டு வெளியேறி விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதையடுத்து அவர் மீண்டும் டில்லிக்கு திருப்பி வைக்கப்பட்டார்.