திருநாகேஸ்வரம்
இன்று ஒப்பியப்பன் கோவில். பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
108 திவ்ய தேச தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளியதைத் தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெறுவதை தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம் மற்றும் விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது.