திருவாரூர்

ன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

இந்த வருடம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாந்தி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.   இதில் ஒரு பகுதியாக அவர் நினைவாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு இன்று திறப்பு  விழா நடக்கிறது.

பொதுவாகத் திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் சட்டென நினைவுக்கு வரும்  எனவே திருவாரூரின் சிறப்பை குறிக்கக்கூடிய வகையில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  ரூ. 12 கோடி செலவில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளைப் போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இங்கு 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.  இந்த விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.  முதல்வர் மு க ஸ்டாலின் கருணாநிதி உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.