என்.எஸ்.கிருஷ்ணன் 113வது பிறந்தநாள் இன்று: நிகரே இல்லாத நாகரீக கோமாளி..

Must read

நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
நிகரே இல்லாத நாகரீக கோமாளி..
பெயர் என்னவோ கிருஷ்ணன்..ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல் மூட நம்பிக்கை களை சாடவேண்டும், அதே நேரத்தில் எதிராளியின் மனதை புண்படுத்தவும் கூடாது.
இப்படியொரு நுட்பமான வழியில் தமிழக மக்களுக்கு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியதில் கலைவாணரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.. சுயசிந்தனையின் அவசியத்தை திரைப்படங்கள் வாயிலாக அள்ளித் தெளித்தவர். நாகர்கோவிலின் சுடலைமுத்துவின் மகனான கிருஷ்ணன் அதாவது, என்.எஸ் கிருஷ்ணன்..
நாடக கலைஞர்களுக்கு எடுபிடி என்ற அடிமட்ட நிலையிலிருந்து, ஒரு நடிகனாக 1935ல் மேனகா படம் மூலம் அறிமுகமானவர்.. சிரிக்க வைத்தபடியே சமூக கருத்துக்களை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கலாம் என்பதை உணர்ந்து அதை முதன் முதலில் திறம்படச்செய்த அறிவாளி,,
தமிழ் சினிமாவில் காமெடிக்கென டிராக்கை தனியாக உருவாக்கியவர். இவர் தமது கோஷ்டியை வைத்து சொந்தமாக தயாரித்து வைத்திருந்த காமெடி டிராக்குகளை விலைக்கு வாங்கி தங்கள் படங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இடம்பெறச் செய்தனர்.
சுமார் 15 ஆண்டுகள், கதாநாயகன், கதாநாயகிக்கு அடுத்தபடி ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம் பெற்றது இவரும் துணைவியார் டி.ஏ.மதுரமும் தோன்றும் காமெடி காட்சிகள்தான்.
தொலைநோக்கு சிந்தனைகளுடன் அவர் பாடிய பாடல்களின் கருத்துகள், பின்னாளில் நிஜவாழ்வில் அப்படியே விஞ்ஞான உதவியோடு பலித்தன.
தனக்காக பாடல்களை எழுதவைத்துவிடுவதில் கலைவாணர் கில்லாடி. அதுவும், அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய நல்லத்தம்பி (1949) படம் என்றால் கேட்கவா வேண்டும்…? உடுமலை நாராயணகவி அவர்களின் வரிகள் கலைவாணர் வாயால் சாகாவரம் பெற்றன..
மனுசன மனுசன் ஏய்ச்சு பொழச்சது அந்த காலம்
பழமை நீங்கி பொது உடமை கோருவது இந்த காலம்
மந்திரம் ஜபிப்பது அந்த காலம்
மழை பொழிய வைக்க எந்திரம் வந்தது இந்த காலம்
ஈழ் குலம் என்ற இனத்தை கொடுத்தது அந்த காலம்
மக்களை இணைத்து அழைக்க முயன்றது இந்த காலம்
சாத்திரம் படிப்பது அந்தக்காலம்
சரித்திரம் படிப்பது இந்தக்காலம்
கோத்திரம் பார்ப்பது அந்தக்காலம்
குணத்தை பார்ப்பது இந்தக்காலம்….
என்று பாடல் போய்க்கொண்டே இருக்கும்..
இந்திய திரையுலகிற்கே நகைச்சுவை முன்னோடி யான இவர், நிஜ வாழ்வில் ஏழை எளியவர்க்கு அள்ளித்தந்த வள்ளல்.
தான் அள்ளிக்கொடுப்பதற்கு முக்கிய காரணமே இவரை பார்த்து கற்றுக் கொண்ட துதான் என்று சொன்னார் மக்கள் திலகம் எம்ஜிஆர்..
1957ல் வெளியான சக்ரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆரோடு டேப்பு சொக்கனாய் என்எஸ்கே போட்டிபோட்டு பாடும் பாட்டு.. உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது என்று அவர் கேட்க, நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குதான் அது என்று எம்ஜிஆர் சொல்லும் அந்தக்காட்சியை மறக்கமுடியுமா?
சிவாஜியின் முதல் தேதி படத்தில், எவ்வளவு எளிமையாக, சம்பளம் வாங்கும் ஒரு சாமான்யனின் மாதாந்திர பொருளாதாரத்தை என்எஸ்கே சொல்லியிருப்பார்?
தேதி ஒன்னுல இருந்து இருபதுவரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்.. இருபத்தொன்னிலிருந்து திண்டாட்டம் திண்டாட்டம்…
என்எஸ்கே வெறும் நகைச்சுசை நடிகர் மட்டுமல்ல. பணம், மணமகள் போன்ற படங்களை தயாரித்து டைரக்சன் செய்து வெற்றி கொண்டவர்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.
1940-களில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற நெருக்கடியில் எம்கே தியாகராஜ பாகவதருடன் சிக்கி சில ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, பலரும் அவரின் திரைவாழ்வு அத்தோடு முடிந்தது என்று பலரும் நினைத்தனர். நிரபராதி என்று விடுதலையாகி வெளியே வந்தபோது பாகவதர் நிலைகுலைந்தார். ஆனால் என்எஸ்கே தளரவேயில்லை. முன்பைவிட திரையில் நகைச்சுவை வீச்சை பகுத்தறிவோடு பல மடங்கு அதிகப்படுத்தினார்.
சூப்பர் ஸ்டார்களான பாகதவர் – பி.யு.சின்னப்பா சகாப்தத்திலிருந்து அடுத்த சகாப்தமான எம்ஜிஆர் – சிவாஜி காலத்தோடும் வெற்றிக்கரமாய் கலந்து பயணித்தார். அதேவேளையில் திராவிட இயக்க பிரச்சாரத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த தவறவில்லை.. திமுக என்பதை திருக்குறள் முன்னேற்ற கழகம் என சினிமாவில் சென்சாருக்கு பெப்பே காட்டிய அதே என்எஸ்கே, பொதுவெளியிலும் தனது ஆதரவை தைரியமாக வெளிப்படுத்தினார்.
1957 சட்டசபைத் தேர்தல்.. காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர். டாக்டர் சீனுவாசன் என்பவர்.. அண்ணாவுக்காக பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், மேடையில் மைக் பிடித்தது முதல், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை டாக்டர் சீனுவாசனின் அருமை பெருமைகளை அப்படி புகழ்ந்து பேசிக்கொண்டே போனார்.. கூட்டத்தினருக்கு பெரும் அதிர்ச்சி..
கடைசியில் முடித்தார் பாருங்கள்… ‘இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்’ என்றார்.
இதேபோல, படிப்பாளிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் லேடீஸ் அன்ட் ஜென்டில் மேன் என ஆரம்பித்து.. கொஞ்ச நேரம் நிறுத்தி, எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் தமிழில் பேச ஆரம்பித்தார். இப்படி மேடை நையாண்டிகளிலும் இவர் கலக்கலான பார்ட்டி..
திரையுலக ஜாம்பவான்களாகட்டும், தமிழக அரசியலை புரட்டிப்போட்ட மிகப்பெரிய அரசியல் தலைவர்களா கட்டும்.. எல்லோரும் எந்த பாகுபாடுமின்றி ”இவர் நம்ம ஆள்” என்று கொண்டாடிய, என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 63 வது நினைவு நாள் இன்று
1937-ல் எம்கேடியின் அம்பிகாபதி படத்தில் நடித்த என்எஸ்கே. 20 ஆண்டுகள் கழித்து சிவாஜியின் அம்பிகாபதி படத்திலும் நடித்தார். அப்போதுதான் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அம்பிகாபதி படத்திலேயே அவரை சிலையாக காட்டி கண்கலங்க வைத்திருப்பார்கள்..
இன்னொரு கொடுமையான விஷயம், என்எஸ்கே , சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனது மூச்சை விடும்போது அவருக்கு வயது வெறும் 49தான்..
அரைநூற்றாண்டைக்கூட முடிக்காத அதிசய வாழ்வு அவருடையது.
கலைவாணரின் 113வது பிறந்த நாள் இன்று.

More articles

Latest article