சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால், அவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளனர்.

இதையடுத்து, இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அமுதம் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர்  பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து,  காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.