சென்னை

நேற்று ஐதராபாத் நகரில் மரணம் அடைந்த சரத்பாபு இறுதிச்சடங்குகள் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது.

பிரபல நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செப்ஸிஸ் எனும் நோயால் சரத்பாபு பாதிக்கப்பட்டார்.  இவர் சென்னையில் சிகிச்சை பெற்று பிறகு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார்.

இந்த மாத தொடக்கத்தில் இவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  எனினும் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததைத் தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார். நடிகை ரமாபிரபாவை இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்து நடிகர் நம்பியாரின் மகள் சிநேகாவைத் திருமணம் செய்து, பிறகு அவரையும் விவாகரத்து செய்தார்.

நடிகர் சரத்பாபு காலமான செய்தி அறிந்ததும் தெலுங்கு திரையுலகில் அவரது நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு வரப்பட்டது. அங்குத் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று இரவு 8 மணிக்குசரத்பாபுவின் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று, மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.