2
 பாரதிதாசன் பிறந்தநாள்
புரட்சிக்கவி என்று அழைக்கப்படும் கவிஞர் பாரதிதாசன்  29.4.1891 இல்  புதிவையில்  பெரும் வணிகர்  கனகசபை  – இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு பள்ளியில் பயின்றார். ஆனாலும்  தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே அதிகம்.  தமிழ் மீது கொண்ட தீவிர பற்றால், தமிழ்ப்பாடத்தை முதன்மையானதாக கொண்டார்.  பதினெட்டு வயதிலேயே  அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
பாரதியார் மீது கொண்ட அபிமானத்தால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழக அரசால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

1

ராஜா ரவிவர்மா பிறந்த தினம்
ரவிவர்மா, கேரளாவின் திருவிதாங்கூர்  சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா – நீலகண்டன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். சிறு  வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.
திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமியிடம்  ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.
இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும்ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 – 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.
மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார்.
1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்திபோன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். “நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.  1906 இல் தமது 58ஆவது வயதில் மறைந்தார்.
 3
கோபுலு நினைவு நாள்
கோபுலு என்கிற கோபாலன் தஞ்சாவூரில் பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஓவியர் மாலியின்ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி
1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியப் பணியின் அமர்ந்தார். தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார்.சாவியின்  வாசிங்கடனில் திருமணம் தொடருக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள், எல்லோரா, தில்லி, ஜெய்ப்பூர், மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்றார். இருபதாயிரம் நகைச்சுவைத் துணுக்குகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.
1963இல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி, சார்பற்ற ஓவியராக கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார்.

  • கலைமாமணி விருது(தமிழ்நாடு அரசு, நவம்பர் 26, 1991)
  • முரசொலி விருது
  • எம். ஏ. சிதம்பரம் செட்டியார் விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது (பகடிப்பட ஓவியர்களுக்கான இந்தியக் கழகம், பங்களூர்)

இவர் 29 ஏப்ரல் 2015 அன்று சென்னையில் காலமானார்]