சென்னை

ன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா, ஜே பி நட்டா உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.  எனவே அதிமுக இல்லாமல் இந்த தேர்தலை பாஜக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.  ஏற்கனவே பாஜகவைப் பலப்படுத்த அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்னும் யாத்திரையை நடத்தி வருகிறார்.

நேற்று தனது 2 ஆம் கட்ட யாத்திரையை குன்னூரில் முடித்துக் கொண்ட அண்ணாமலை வரும் 4 ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது 3 ஆம் கட்ட யாத்திரையைத் தொடங்க உள்ளார்.  இதற்கிடையே இன்று அண்ணாமலை குன்னூரில் இருந்து கோவை வந்து அங்கிருந்து விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளார்.

அவர் டில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.  மேலும் சில முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.  அண்ணாமலை அவர்களுடன் தமிழக அரசியல் குறித்துக் கலந்துரையாட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.