சென்னை:  இன்று ஆடி பவுர்ணமி நாள் என்பதால், திருவண்ணாமலைக்கு  கிரிவலம்  செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலம் செல்வது பக்தர்களின் வாடிக்கையாக உள்ளது. இதற்காக   உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இங்கு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலையை சிவபெருமானாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அண்ணாமலை என்றழைக்கப்படும் மலையை சுற்றி 14 கி.மீ தொலைவு கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி  நாளன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். அதிலும், சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் மகாதீபம் ஏற்றப்படும் நாளும் மிகவும் பிரசித்திபெற்றவை.

இந்த நிலையில் இந்த மாதம் ( ஆடி மாதம்) பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆடி மாத பவுர்ணமி  வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி, மறுநாள் 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணி வரை உள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்த காலம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்  சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி,  சென்னையில் இருந்து இன்று அதிகாலை முதல்,  30 சிறப்புப் பேருந்துகளும், திருப்பத்தூரிலிருந்து 30 சிறப்புப் பேருந்துகள், வேலூரிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகள், ஆற்காட்டிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.