முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்படுகிறது.

விஜய் இயக்கும் இந்த படத்தில் ’’சர்ச்சை நாயகி’’ என இந்தி சினிமாவில் விமர்சிக்கப்படும் கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

கொரோனா காரணமாக சுமார் எட்டு மாதங்கள் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று, முழுமையாக குணம் அடைந்த பின் விஜய் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றார்.

“கங்கனா ரணாவத் சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் ஜெயலலிதா வேடத்தில், கங்கனா நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் அப்படியே அம்மாவை (ஜெயலலிதா) பிரதிபலித்து வியக்க வைத்து விட்டார்” என கங்கனா புகழ் பாட ஆரம்பித்த விஜய், பாமாலையை தொடர்ந்தார்.

“ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரொம்பவும் மெனக்கெட்டார். 17 கிலோ எடையை கூட்டினார். ஒரு பாடல் காட்சிக்காக எடையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, 15 கிலோ எடையை குறைத்தார்.

இத்தனைக்கும் அவர், இந்த ஷுட்டிங் முடிந்து வேறு வேறு படங்களில் நடிக்க வேண்டியிருந்தது. ‘தலைவி’ படத்துக்கு கங்கனா பெரிய பங்களிப்பை செய்துள்ளார்” என்று ஓய்ந்தார், இயக்குநர் விஜய்.

– பா. பாரதி